Tags


டிங் டாங்! டிங் டாங்! மிகவும் பழைய செங்கல் வீடு, அதன் கூரை மற்றும் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் தேவாலய கட்டிடமாக மாற்றப்பட்டு பல நூற்றண்டுகள் ஆகியிருந்தது. “பன்னம்” என அழைக்கப்படும் காட்டு ஃபெர்ன்களின்  எல்லையிலுள்ள ஒரு குறுகிய பாதை பிரதான வீதியிலிருந்து அதை நோக்கிச் சென்றது. பள்ளத்தாக்கின் சிறிய சமூகத்தில் அங்கும் இங்கும் சிதறியுள்ள சில கட்டிடங்களில் இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. 

1958 ஆம் ஆண்டு லாங்யர்பைனில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் தேவாலயம். உலகின் வடக்கு திசையில் உள்ள இந்த புதிய தேவாலயம் வந்த பிறகு பழைய தேவாலயத்தை பலரும் மறந்து போயிருந்த காலம். இந்த தேவாலய கட்டிடத்தின் பின்னால்  ஒரு கல்லறை இருந்தது.

தேவாலய உறுப்பினர்கள் இறந்த  பிறகு அங்கு அடக்கம் செய்யப்படுவது வழக்கம். இதற்கெல்லாம் மேல் பலஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கொலைகாரன் அங்கே புதைக்கப்பட்டதாக வதந்திகள் வந்தபின் உள்ளது. அவன் தன்னுடைய கோடரியால் பலரை கொன்றிருப்பதால் அவனை  “கோடாரி பேய்  மனிதன்” என்று அந்த ஊரில் அழைப்பதுண்டு.

சிலர் இன்னும் முழு நிலவு நாளான பௌர்ணமியன்று பேயாக மாறி கல்லறையிலிருந்து வெளியே வந்து சுற்றித் திரிவதாக நம்புகின்றனர். நள்ளிரவில் அந்த பேய் மனிதன் தன்னுடைய கோடரியைக் கூர்மைப்படுத்துவதைக் கேட்டதாக கூட சிலர்  சொல்லுவர், ஆனால் யாரும் அதை பார்த்ததாக இதுவரை தெரியவில்லை.

ஃப்ரெட்ரிக் புதிய போதகராக சமீபத்தில் தேவாலயத்தில் சேர்ந்தார். ஸ்வீடன் நாட்டில் தனது மனைவி ஷெரினுடன் வசித்து வந்தார். ஸ்வல்பர்டுக்கு புதிதாக வந்திருப்பதால் தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு வீடு பார்த்துக் கொண்டிருக்கையில்  தேவாலயத்திலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  கோடாரி பேய் மனிதன்  வதந்திகளைப் பற்றி அவர்  அறிந்திருந்தார், ஆனால் அத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் இடமில்லை என்று நம்பினார்.

ஸ்வால்பார்ட்டில் கிறிஸ்துமஸ் நேரம் மாயாஜாலமானது. அந்த முதல் சனிக்கிழமையன்று, ஃப்ரெட்ரிக் மற்றும் ஷெரின் தேவாலய உறுப்பினர்களில் ஒருவரால் கிறிஸ்துமஸ் நிகழ்வு மதிய உணவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். உணவு சுவையாக இருந்தது, அவர்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்கள். கோடாரி பேய் மனிதனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். அவர் அந்த விஷயங்களை நம்பவில்லை என்று கூறினார். 

அழகான மற்றும் அமைதியான போலார் நைட் ஸ்வால்பார்ட் மீது படர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஃப்ரெட்ரி க்ஷெரினுடன் தேவாலயத்திற்கு செல்ல புறப்பட்டார். லாங்கியர்பைனில் உள்ள பிரதான வீதி அலங்காரங்களால்  ஜொலித்துக் கொண்டிருந்தது. மேலும் நார்வே  நிலப்பரப்பில் இருந்து வளர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் மின்னி கொண்டிருந்தது. இதுவே ஞாயிற்றுக்கிழமை என்றால், லாங்கியர்பைனில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கும். ஏனனில் துருவ ஒளி அல்லது ஆரோரா எனப்படும் வட, தென் துருவபகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளி இங்கு மிகவும் புகழ் பெற்றது. இதை காணவே மக்கள் கூடுவது வழக்கம்

பாஸ்டர் ஃப்ரெட்ரிக் தன்னுடைய படுக்கையறை  மேசையில் அமர்ந்தார். மின்சாரம் இல்லாததால், போதுமான எண்ணெய்  விளக்குகள் இருந்தன. கர்த்தரை பிராத்தித்துவிட்டு உறங்க சென்றார். காலையில் கல்லறையை எதிர்கொள்ளும் ஜன்னல்  வழியாக ஓடும் ஒரு அழகான சூரிய ஒளியால் தூக்கத்திலிருந்து எழுந்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். சில கல்லறைகளுக்கு மேல் புதிய பூக்கள் வைக்கப்பட்டிருந்தது அந்த விடியற்காலையில் காண ரம்மியமாக இருந்தது.

யாரோ கதவைத் தட்டினர். கதவை திறந்து பார்த்த போது இளம் பையன் ஒரு கூடை சுமந்து நுழைந்தான்.

காலை வணக்கம் ஐயா! எனது அம்மா உங்களுக்கு சிற்றுண்டி கொடுத்து உள்ளார். அதை கையில் வாங்கிக்கொண்டு அவனுக்கு நன்றி தெரிவித்தார். அன்றைய நாளும் எப்போதும் போல் சென்றது. இரவு ஃப்ரெட்ரிக் மனைவியுடன் சீக்கிரம்  படுக்க சென்றார். நினைத்து பார்த்தால் நாள் அவ்வளவு பரபரப்பாக இல்லை ஆனால் களைப்பாக இருப்பது போல்  தோன்றியது. 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறுவதால் மக்கள் தங்களுக்கு கிடைத்த நேரத்தில்  ஆலயத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். அதுவே தங்களது களைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைத்தார். 

கடந்த இரண்டு நாட்களில் பார்வையிட்ட இடங்களைப் பற்றி அவர்கள் அரட்டையடிக்க இன்று இரவு சிறிது நேரம்  கிடைத்தது நிறைவாக இருந்தது. குல்தூர்ஹுசெட்டில் உள்ள பாரம்பரிய கிறிஸ்துமஸ் சந்தை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் நிலைத்தன்மையின் உணர்வில் விற்கப்பட்டது ஆச்சரியத்தை உள்ளாக்கியது. சில குடும்பங்கள்  இலையுதிர்காலத்தில் மான்களை வேட்டையாடி அதை நன்றாக மசாலா தடவி ஊறவைத்து குளிர்பெட்டியில் சேமித்து வைத்து வருடகடைசியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு மற்றும் துணிமணிகளுடன் ஆர்க்டிக் வனபகுத்தியில் இருக்கும்  தங்களது விடுமுறை கேபின்களுக்கு  செல்லுவது அறிந்து தாங்களும் அடுத்த ஆண்டு பின்பற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், தேவாலயத்திற்குச் செல்லாத பல குடும்பங்கள் இன்னும் இருந்தன, ஏனென்றால் இங்கே பேய் இருப்பதாக அவர்கள் நம்பினர், பயந்தனர்!! கோடாரி கொலைகாரன் சுற்றித் திரிவதில்லை என்று இந்த மக்களை நம்ப வைக்க கர்த்தர் ஒரு வழியைத் திறப்பார் என்று மனதில் ஒரு பிரார்த்தனையுடன் தூங்கிவிட்டார். 

திடீரென்று ஒரு ஊளையிடும் சத்தத்தை கேட்டு ஃப்ரெட்ரிக் எழுந்தார். மணியை பார்த்தால் நள்ளிரவு 12 மணி. ஒரு அனுமான்ஷிய காற்று அடிப்பது போல் உணர்ந்தார். ஜன்னலுக்கு வெளியில் பார்த்தால் கடும் இருட்டாக இருந்தது. இருண்ட மேகங்களுடன் கூடிய புயல் வளிமண்டலம் சந்திரனில் இருந்து எந்த ஒளியையும் மறைத்தது.  தலையணைக்கு கீழ் டார்ச்லைட் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டார். அவரது மனைவி சிறுது கூட அசைவில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது கண்டு ஒரு புண்வருடும் சிரிப்போடு மீண்டும் படுத்துக்கொண்டார்.

பின்னர் மறுபடியும் அதைக் கேட்டார். யாரோ உலோகத்தைத் துடைப்பது அல்லது ஒரு கருவியைக் கூர்மைப்படுத்துவது போன்ற ஒரு ஒலி. 

ஷெரின், எழுந்திரு! நீ அந்த சத்தத்தை கேட்டாயா?

“என்ன? அறை ஏன் இருட்டாக இருக்கிறது?

வெளியில் கடும் காற்று அடிப்பது போல் உள்ளது. அதனால் மின்சாரம் எந்நேரமும் சென்று விடும் என்று நினைக்கிறேன். கவனமாக கேள்! 

சிலீரென்று காற்றை கிழித்து கொண்டு ஒரு கூக்குரல் ஒலிப்பது கேட்டு ஷெரின் தனது கணவரைப் பிடித்துக் கொண்டார், “அது என்ன?” 

எனக்கு தெரியாது!

கோடாரி பேய் மனிதன் யாரையாவது கொன்றிருக்கலாம், என்று அவள் நகைச்சுவையாக சொன்னாள். 

உனக்கு சிரிப்பாக இருக்கிறது, ஆனால் பேய் உலகம் பற்றி உனக்கு தெரியுமா. அவை இவ்வாறுதான் நள்ளிரவில் சுற்றி கொண்டிருக்கும்! 

“சரி, ஜன்னலுக்கு வெளியே எட்டி அந்த ஒலி என்னவென்று பாருங்கள்.” ஒரு பேய் இருப்பதாக நீங்கள் உண்மையில் நம்பவில்லை, இல்லையா? ‘ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை’, என்று தன் கணவருக்கு மேற்கோள்  காட்டினார். 

மறுபடியும் அதே சத்தம். இம்முறை ஷெரின் தனது கணவரை ஜன்னலுக்கு வெளியே பார்க்க சொன்னார் .

ஒலி சத்தமாக வந்தது. இந்த முறை ஜன்னலுக்கு அருகில் இருப்பது போல் தோன்றியது. பாஸ்டர் ஃப்ரெட்ரிக் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார், மனைவியை தனது கைகளில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். 

திடீரென்று சத்தம் நின்றது. மயான அமைதி நிலவியது.

“ஷ்! ஷ்!” ஷெரின் கிசுகிசுத்தாள். “இப்போது அவன் கோடரி கூர்மைப்படுத்திவிட்டான். எழுந்து கண்ணை மூடிக்கொண்டு தலை தெறிக்க  ஓடுங்கள்! ” அவள் கிண்டல் செய்தாள். 

அவரது கை மனைவியின் உடலைச் சுற்றி உறைந்தது. அவளுடைய உடல் தளர்வானது, விரைவில் சிறிய குறட்டை அவள்  உதடுகளிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தது. “ஹ்ம்ம்! இவள் மட்டும்  எப்படி அவ்வளவு எளிதில் தூங்க முடியும்!” 

வெளியே விசித்திரமான சத்தங்கள் நின்றுவிட்டன, பாஸ்டர் ஃப்ரெட்ரிக் அவரது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இப்போது அதிகாலை 1:55 மணி. இரவு முழுவதும் மெதுவாக கடந்து சென்றது. மீதமுள்ள மணிநேரங்கள் அனுமதித்த இடைப்பட்ட தூக்கத்தின் போது, ஃப்ரெட்ரிக் பேய்கள் மற்றும் கொலைகாரர்களைக் கனவில் கண்டார். 

ஜன்னல் வழியாக பிரகாசமான சூரிய ஒளி புதிய நாளை வரவேற்றது. ஜன்னலுக்கு வெளியில் பார்த்தார். எவ்வளவு ரம்மியமாக இருந்தது. நேற்று இரவு உண்மையில் நடந்ததா? அல்லது இது ஒரு கனவா?  

காலை உணவுக்குப் பிறகு, ஷெரின் “நேற்றிரவு கேட்ட சத்தத்தை நான் துப்பு துலக்க போகிறேன்.”

பாஸ்டர் ஃப்ரெட்ரிக் எச்சரிக்கையாகப் பார்த்தார், பின்னர் சிரித்தார். உள்ளே எவ்வளவு பீதியடைந்தார் என்பதை மனைவி பார்க்க விரும்பவில்லை. “நேற்றிரவு கோடாரி பேய் மனிதன் நடவடிக்கைகள் குறித்து துப்பு துலக்க போகிறாயா என்  அன்பே?” அவர் தனது குரலை சாதாரணமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள கொஞ்சம் சிரமப்பட வேண்டிதான் இருந்தது. 

“ஆமாம், ஃப்ரெட்ரிக், என்னுடன் வாருங்கள்,” என்று ஷெரின் கூறவும்.  ஒன்றாக அவர்கள் கல்லறை நோக்கி வெளியே சென்றனர். அங்கே குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்தது. எதுவும் கவலைப்படும்படியாகவும் கலவரப்பட வேண்டியதாகவும் தெரியவில்லை. நிறைய துப்பறியும்  நாவல்களைப் படித்த ஷெரின், கால்தடங்களைத் தரையில் பார்க்கத் தொடங்கினார். 

“பேய்கள் கால்தடங்களை விடாது, அப்படியே விட்டாலும் நேற்று இரவு பெய்த மழையில் அவை அழிந்திருக்கும்.

ஷெரின் கணவரை புறக்கணித்தார். பூமி மிகவும் வறண்ட ஒரு இடத்திற்கு அவர்கள் வந்தார்கள். “இங்கே பாருங்கள்,ஃப்ரெட்ரிக், இங்கே ஒருவித முத்திரை. இது ஒரு குளம்பு அச்சு அல்லவா? ”  

ஃப்ரெட்ரிக் குனிந்து அந்த இடத்தை ஆய்வு செய்தார். “ஆம், இது நிச்சயமாக ஒரு குளம்பு குறி. ஒரு கன்று அல்லது குதிரை போல் தெரிகிறது. 

இதோ! இங்கே இன்னொன்று. வாருங்கள், இதன் பின்னல் சென்று எங்கு முடிவடைகிறது என்று பார்ப்போம், ஷெரின் சொன்னாள்.

சூரியன் இப்போது பிரகாசமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது, விலங்குகளின் குளம்புகள் தெளிவாகத் தெரிந்தன. அவர்கள் ஒரு சில கெஜம் நடந்த பிறகு ஒரு கழுதை சத்தமிடுவதைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள ஒரு புதரில் பார்த்தார்கள். அதன் கழுத்திலிருந்து ஒரு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதன் உரிமையாளரிடமிருந்து விலகிச் சென்றதாகத்  தோன்றியது.

நேரம் மிகவும் தாமதமாகவே, அவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்தனர். இரவில் ‘கோடாரி கொலைகாரன்’ மர்மத்தை தீர்க்கவில்லை என்று ஷெரின் ஏமாற்றமடைந்தாள், ஆனால் அடுத்த முறை அவள் இந்த இடத்திற்கு வரும்போது, விசாரிக்க நள்ளிரவில் வெளியே செல்ல வேண்டியிருந்தாலும் கூட, தான் செய்வேன் என்று சபதம் மேற்கொண்டாள்.

அவர்கள் கட்டிடத்தை நெருங்கியபோது, ஃப்ரெட்ரிக் இன்னும் சில குளம்பு அடையாளங்களை கவனித்தார். இங்குள்ள தரை மிகவும் வறண்டு குளம்பு அச்சுடன் இருந்தது. சற்று நெருக்கமாகப் பார்த்தபோது சில விலங்கு முடிகளைக் கண்டார்.

“ஷெரின்,” அவர் உற்சாகமாக அழைத்தார், அவர் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, “நான் மர்மத்தை தீர்த்துவிட்டேன். கோடாரி மனிதன் பேய் இல்லை. அந்த கழுதை மழையின் போது சுவர்களுக்கு எதிராக அதன் உடலை தேய்த்துக்கொண்டிருக்கிறது. இங்கே குளம்பு அச்சிட்டுகளையும், சுவரில் சில கழுதை முடிகளையும் கவனித்தபோது ஒரு கருவியின்  கூர்மைப்படுத்துவது போல கேட்ட வித்யாசமான ஒலி. அதுவே இரவு நேரமாக இருப்பதால் மேலும் ஒலியுடன் கேட்கிறது.

எனவே, பயப்பட ஒன்றுமில்லை, ஷெரின் கூறினார். “அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.”

“ஆம், அன்பே,” பாஸ்டர் ஃப்ரெட்ரிக் கூறினார். “செய்வோம், ஆனால் இந்த தேவாலயத்தில் பேய் இல்லை என்பதை அவர்கள்  ஏற்றுக்கொள்வதற்கு சிறிது காலம் ஆகும்”. 

நீண்ட நாள் மக்களிடம் இருந்த சந்தேகம் இன்றுடன் முடிவடைந்த திருப்தியுடன் ஃப்ரெட்ரிக் தனது மனைவி ஷெரீனை கட்டி அணைத்தார். 

அன்று மாலை  உள்ளூர் மக்கள் நார்வேயின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வண்ணமயமான பிராந்திய ஆடைகளை அணிந்து லாங்கியர்பைனின் சாலைகளில் நடந்து கொண்டிருக்க, புகழ்பெற்ற Funktionærmessen உணவகத்தில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்டனர்.  இந்த உணவு விடுதியின் பெருமை லாங்கியர்பைன், ஹியோர்த்ஜெல்லெட் மற்றும் லாங்கியர்பிரீன் ஆகியவற்றின் பரப்பளவை அழகாக எடுத்து காட்டும். உணவை முடித்து விட்டு டாக் ஸ்லெடிங்  காண அருகிலுள்ள நிகழ்வுக்கு செல்ல ஆயத்தமாயினர். 

ஸ்வால்பார்ட்டின் பனிப்பாறைகள் உருகிய நீரால் உருவான எண்ணற்ற பத்திகளைக் கொண்டிருக்கின்றன, இது கண்கவர் பனி குகைகளுக்கு வழிவகுக்கிறது. அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக இவற்றில் சிலவற்றை நாளை பார்வையிட டாக்ஸ்லேட்டில் மட்டுமே செல்ல முடியம் என்பதால் இப்போதுள்ள நிகழ்வு மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று குதுகூலத்துடன்  செல்ல தொடங்கினர்.