ரேவதி பால் எடுக்க ஃப்ரிட்ஜ்ஐய் திறந்தாள். இது சனிக்கிழமை. மகன் கார்த்திக் மற்றும் மகள் மீரா தங்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது கணவர் சரவணன் இன்னும் மாஸ்டர் பெட்ரூமில் தூங்கி கொண்டிருந்தார் .

அவள் ஒன் பெர்ஸன்ட்  மில்க்கை  அடுப்புக்கு அருகில் வைத்து கீழிருந்த ஷெல்ப்ஃஐ திறந்து பால் பாத்திரத்தை எடுத்தாள். பாத்திரத்தில் பாலை ஊற்றியதும் வெள்ளை தண்ணீரை ஊற்றியது போல தெரிந்தது. அடுப்பை பற்ற வைத்து மணி பார்த்த போது  7.15 என காட்டியது.

கடந்த வாரம் அந்த 1500W மைக்ரோவேவ் அடுப்பிலிருந்து விடுபட்ட பிறகு, சமையல் அறையில் அந்த மூலை இப்போது பெரிதாகத் தெரிந்தது. உணவை சூடாக்க மைக்ரோவேவ் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் குறித்து சரவணனிடம் பல மாதங்கள் சொன்ன பிறகு, இறுதியாக அதைத் தூக்கி எறியலாம் என்றார். என்னவோ மாரேஜ்க்கு எங்க வீட்டுல கொடுத்த சீதன சாமான் போல அத விட மாட்டேன் பேர்வழின்னு ஒத்த கால்ல நின்னுக்கிட்டுருந்தார் மனுஷன்.

உள் முற்ற கதவை லேசாக திறந்து வெளி காற்றை வர செய்தாள். சரவணன் வேலை காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சிகாகோ அருகில் இருக்கும் நேபர்வில் பகுதிக்கு குடி புகுந்தார். 6 மாதங்களுக்குப் பிறகு, ரேவதியும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டனர். ஒரு வருடத்திற்குள் பசுமையான மரங்கள் அடர்ந்திருந்த சுற்றுப்புறசூழலில் இந்த அழகிய புதிய வீட்டை கட்டுமுன்பே வாங்கி தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொண்டனர் .

ரேவதி இந்த வீட்டை மிகவும் விரும்பினாள். கொல்லைப்புறத்தில் உயரமான மரங்கள் மற்றும் தாவரங்கள் இருந்தது மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் வீட்டிற்குள்ளே தொட்டியில் கருவேப்பிலை, துளசி, கற்பூரவல்லி, மல்லி போன்ற பல வகையான இந்திய வகை செடி கொடிகளை வளர்த்து வந்தாள்.

வசந்த காலம் இப்போதுதான் துளிர்த்து வேலையில் காலை கதிரவன் எட்டி ரேவதியை பார்த்து ஒளிர்ந்து கொண்டிருந்தான். ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் கதவை மூடிவிட்டு அருகில் இருந்த முக்காலியில் உட்கார்ந்தாள்.

வெளியே அணில் ஜோடியாக துரத்தி ஓடிக்கொண்டிருந்தது, பறவைகள் சிறகுகளை ஒய்யிரமாக சிறகடிக்க, வெயிலில் பளபளக்கும் புல் மீது பனி வார  இறுதி தொடங்குவதற்கு சரியான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது.

கோயம்புத்தூரில் உள்ள  தொண்டமுத்தூரில் குழந்தையாக வளர்ந்த நாட்கள் அவள் நினைவை வருடியது. ஹ்ம்ம்! எவ்வளவு சிறந்த நாட்கள் அவை. அம்மா அவளை எழுப்பும்போது குளித்து நெற்றியில் பெரிய பொட்டை வைத்து அழகாக காட்சி தரும்போது அதை ரசிப்பதா இல்லை ஒரு அம்மாவுக்கே உரித்தான அந்த அழகிய நறுமணத்தை ரசிப்பதா என்றே தெரியாது

என்னடி, இப்போதான் எழுந்திருப்பியா? கோழி கூவி ரெண்டு மணி நேரம் ஆகுது. மகாராணி தெனமும் இப்படி எழுந்திருச்சா போற வீட்டுல என்ன பாத்து என்ன சொல்லுவாங்க. ஒரே பொண்ணு, அத ஒழுங்கா வளக்க தெரியல. பாரு நல்லா பாசம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க.

உனக்கு வேற வேலையா இல்லையே, பொண்ணு வார கடைசிலையும் நல்ல தூங்க விடமாட்டே!

ரேவதியின் ஆதரவுக்கு அப்பா வந்தார். அப்பா சேதுமஹாலிங்கம். சுகர்க்கேன் பிரீடிங் இன்ஸ்டிடூடில் வேலை பார்த்துட்டு இருந்தார்.  வந்த சம்பளத்த சேமிச்சு வெச்சி இந்த வீட்டை மாடெர்னா கட்டுன அதே சமயம் நட்ட நடு வீட்டுக்குள் வெளிச்சம் வரும் முற்றமும் சமையல் அறையை பாரம்பரியமான முறையில் வெக்கணும்னு பாத்து பாத்து கட்டியிருந்தார்.

மிக்சி, எரிவாயு அடுப்பு மெதுவாக ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து கொண்டிருந்த வேளையில் அவர் அந்த வாழ்க்கை முறைக்குள் செல்ல பிடிவாதமாக இருந்தார். அம்மா சொல்லவே வேணாம், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதுல பொருத்தம் இருக்கோ இல்லையோ சாப்பாடுன்னு வந்தா  ரெண்டு பேருக்கும் பத்து பொருத்தம்.

காலங் காத்தால நல்ல பில்டர் ஃகாபி குடிச்சுட்டு இந்த மனுஷன் இதையும் பேசுவார், இன்னமும் பேசுவார்.

இவளுக்கு போற வீட்டுல நல்ல தூங்கிட்டுருந்தா புருஷன் ஒதச்சுதான் காபி கேட்பார். வீட்டுக்காரர் கைல காத்தால முதல் வேலையா ஒரு மணமான காபி கொடுத்தா அந்த நாள்ல பாதி நல்லா  இருந்த மாதிரிதான். என்ன நான் சொல்றது!

எங்கள் சமையலறை அப்போது மிகப் பெரியதாக இருந்தது, மரக் குச்சிகள் மற்றும் கரியுடன் ஒரு பெரிய அடுப்பு இருக்கும். அவளுடைய அம்மா அதாவது என் அம்மம்மா கொடுத்த செம்பு அஞ்சறை பெட்டி மூலையில் ஆட்டுக்கல்லும், அம்மிக்கல்லும் இதோ நாங்க ரெடி, நீங்க ரெடியான்னு கேட்டுட்டு இருக்குற மாதிரி இருக்கும். இந்த இடமே அம்மாவின் தர்பார்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

பாத்திரத்தில் இருந்து பால் பொங்கிய சத்தத்தில் மீண்டும் நினைவுக்கு வந்தாள் ரேவதி. அடுப்பை அனைக்க சமையலறைக்கு ஓடினாள். பால் இவ்வளவு நேரம் சுட்டு கீழே கொட்டுகிறது ஆனா ஒரு ஸ்மெல்லும் வராம எதோ தண்ணிய சுட வெச்ச வாசனை மட்டும் தான் வருது.

பரவாயில்லை. வாசணை உணர முடியது. எங்க கொரோனா வந்துச்சோன்னு பார்க்கறீங்களா. நம்ம பாரம்பரியமான சத்து உணவை சாப்பிட்ட உடம்புங்க. சும்மா தெறிக்க விடமாட்டோம் கொரோனவ!

இதே நம்ம ஊரு பால்கார முருகேச தாத்தா தலைல டவல கட்டிட்டு விடிய காலையில் சைக்கிளை உருட்டிக்கிட்டு வந்து “அம்மா பால்னு” கூப்பிட்டு சும்மா நுரை தளும்ப பசும் பால் எடுத்து பாத்திரத்துல ஊத்தி அத அம்மா கட்ட அடுப்புல வச்சி கொதிச்சதும் பக்கத்துல இருக்குற சின்ன ஸ்டீல் டப்பாவில் இருந்து புரூக் பாண்ட் பில்டர் காபி போட்டு, வெள்ளை வெளேருன்னு இருக்குற சீனியை போட்டு காபி கொடுப்பாளே!

அப்பப்பா! அப்பா முகத்த பாக்கணுமே, இந்த உலகத்துல இதுக்கு மேல வேற என்ன வேணும்? அது சரி, இங்க இந்த வெள்ள தண்ணியத்தான் பாலுன்னு சொல்லிட்டு இங்க எல்லாம் குடிக்கிறோம். எதோ காலை கடனுக்கு.

ஷெல்ப் திறந்து காபி ஜார் எடுக்கும் போதுதான் ப்ரு காபி தீர்ந்து விட்டது தெரிந்தது. ஐயோ!  இதுவும் நமக்கு குடுத்து வைக்கலையே. நாடி நரம்புக்குள்ள இருக்குற புத்துணர்ச்சியெல்லாம் இந்த காபி நம்பி தான் இருக்கே!

வால்மார்ட்டில் சில நாட்களுக்கு முன்  வாங்கிய ஃபோல்ஜர்  காபியின் சிறிய ஜாடியை கண்டுபிடித்து அதை பாலில் கலந்தாள். முதலில் கடைக்கு சென்று ப்ரு காபியை வாங்க வேண்டும், இல்லைனா சரவணன் என்னை பிழுஞ்சு எடுத்திடுவார். எனக்கே  பைத்தியம் பிடிச்சாலும் ஆச்சர்யப்படமாட்டேன் .

பிரவுன் சுகர எடுத்து காபியில் கலந்து, அடுப்பு அணைக்கப்பற்றிருக்கிறதா என்று பார்த்து மீண்டும் சோபாவில் வந்து உட்கார்ந்தாள். டிவியை மாற்ற ரிமோட்டை எடுத்தாள். அடுத்த 5 நாட்களுக்கு உள்ளூர் வானிலை செய்தி, சில விபத்துக்கள் மற்றும் பிற விஷயங்களைப் பற்றிய செய்திகள் வந்தன. முக்கியமானது எதுவுமில்லை,

ரேவதி டிவியை அணைத்துவிட்டு ரிஃலைனர் சோபாவில் காலை நீட்டி கண்களை மூடிக் கொண்டாள். பழைய நினைவுகளை தீண்ட தூண்டியது மனது.

அடுப்புல ஆவி பறக்க இட்லி பாத்திரம் இருக்க, அம்மா அத திறந்தவுடன் வருமே ஒரு வாசனை, அட! அட!

இந்த மல்லிப்பூ இட்லிக்கு ஒரு வாசனை இருக்குதுனு அமெரிக்கா வந்த பிறகுதான் அதோட அருமை தெரியுது. இங்க கிடைக்குற அரிசி உளுந்துல  மாவு அரைச்சா இட்லி வெள்ளைய உருண்டையா கல்லு மாதிரி   இருக்குது, ஆனா எதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்கு.

அம்மி கல்லுல பச்சை மொளகாவோட தேங்கா, கொஞ்சம் பொட்டு கடலை, கல்லு உப்பு, புளி சேர்த்து சிறுவாணி தண்ணிய கொஞ்சம் தெளிச்சி சட்னி அரைச்சு அதுல நெய் ஊத்தி இட்லியோட சாப்பிட்டா….

இருங்க இருங்க, அதுக்குள்ள வாய் ஊறுதுன்னு ஜொள்ள தொடைக்கிற மாதிரி இருக்கு, பரவாயில்ல விடுங்க, இதெல்லாம் அனுபவிக்கனும்!

மறுபடியும் பாக் டு நம்ம ஊரு கதைக்கு வருவோம்.

பாட்டி வடை சுட்ட கதையை மட்டும் தான் கேட்டுருக்கேன், ஆனா எங்க அம்மா அந்த இட்லி இல்லாத நாளுல மணக்க மணக்க நெய் மிதக்க பொங்கல் வடை சட்னி சாம்பார் செஞ்சாங்கன்னா பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் பக்கத்திலேயே வராது. அப்படி ஒரு ஆனந்தம்.

அத சாப்பிட பிறகு அப்பாவோட சேந்து எனக்கு கண்ணு காட்டும் பாருங்க!

அய்யோயோ!

வடைன்னு நெனைச்சொன்னதான் பருப்பு வாங்கணும்னு நினைப்பு வருது. நாளை கார்த்திக்கின் பிறந்த நாள், எனவே வீட்டில் ஒரு சிறிய பர்த்டே பார்ட்டிக்கு  திட்டமிட்டுள்ளோம்.

நண்பர்கள் அவர்களின்  குட்டீஸுடன் வருவார்கள். மீராவின் சென்ற பிறந்தநாள் விழாவில் பீட்சா  மற்றும் சாலட் மட்டுமே இருந்ததால் இம்முறை  தென்னிந்திய உணவு மட்டுமே. ஒரு கை பார்க்கனும்னு போல இருந்தது.

சிறு வயதில் கல்லை கொடுத்தாக்கூட கவலையே இல்லாம கடித்து நொறுக்குற நாம அப்பா அம்மா என்ன கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அவங்க கொடுத்தது எல்லாமே நம்ம ஊரு பாரம்பரியமான உணவே.  பல்வேறு வகையான எண்ணெய், மைதா, இனிப்பு, அரிசி, GMO/non-GMO, இயற்கை உணவு, ஃசீஸ் எதை பற்றியும் நினைத்து கூட பார்த்ததில்லை. 

நம்ம ஃபில்டர் காபி, இட்லி, பொங்கல் வடை பத்தி சொல்லவே இவ்வளவு நேரம் ஆகுதுன்னா மதிய ஃபுல் மீல்ஸ், சாய்ங்கால நொறுக்கு தீனி சுட சுட இஞ்சி மசாலா டீயோட இரவு சிற்றுண்டி வரைக்கும் சொல்லனும்னா இந்த கதை பத்தாதுங்கோ.

அம்மா! 

அம்மாஆ !!

ரேவதி நினைவுக்கு வந்தாள்.

நேற்று இரவு ஃப்ரைடே வீகென்ட்  மூவி பார்த்து நீண்ட தூக்கத்திற்குப் பிறகு மீரா கண்களைத் துடைத்துக்கொண்டே ரேவதி அருகில் வந்தாள். கார்த்திக்கும் சரவணனுக்கு இன்னும் அமெரிக்க கோழி கூவ சிறிது நேரம் ஆகும்.

அம்மா, மார்னிங்  என்ன பிரேக்பாஸ்ட்? 

தயவு செய்து இட்லி, தோசை, உப்மா, சப்பாத்தி, பூரி, பொங்கல்னு சொல்லாதே… பட்டியல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ரேவதி, “ஏண்டி இதுக்கு மேல நான் என்னதான் செய்யறது. நீயே அதையும் சொல்லிடு.

மாம், ஜஸ்ட் மேக் பாஸ்தா!